FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, December 19, 2010

ஸ்பெக்ட்ரம்

நன்றி;  "கல்கி" வார இதழ்.


ஓ பக்கங்கள்
ஞாநி

’டெலி’ நோக்குப் பார்வை

ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசா, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள் வீடுகளில் இந்த மாதம் சி.பி.ஐ. நடத்திய ரெய்டு நிஜமாகவே உண்மைகளைத் தோண்டுவதற்கு நடந்ததா, அல்லது அடிக்கிற மாதிரி அடி, அழுகிற மாதிரி அழுகிறேன் என்ற கண் துடைப்பு ஏற்பாடா என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்பே செய்திருக்கவேண்டிய ரெய்டுகளை இப்போது செய்தால் என்ன சிக்கும் என்ற நியாயமான கேள்வி எழுகிறது. தமிழில் ராசா எழுதி வைத்த சங்கேதக் குறிப்புகள் உள்ள டயரி சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பதாக உறுதியாகாத செய்திகள் சொல்கின்றன. அப்படி ஒரு டயரியை இத்தனை காலம் ராசா தம் வீட்டிலேயே வைத்திருந்தது உண்மையென்றால், தம்மீது யாரும் கைவைக்க முடியாது என்று அவருக்கு இருந்த தன்னம்பிக்கையையும் அரசியல் செல்வாக்கையும்தான் அது காட்டும். அல்லது இப்போது ரெய்டில் என்னை மாட்டினால், நீங்களும் அழிவீர்கள் என்று இன்னும் மாட்டாதவர்களை மிரட்டுவதற்காக வேண்டுமென்றே டயரியைச் சிக்க வைத்திருக்க வேண்டும்.
இந்த ஊழலில் கடைசியில் உண்மை வெளியாகி அயோக்கியர்கள் எல்லோரும் பிடிபட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு தேசத்தின் பணம் மீட்கப்படுமா என்பது இன்னும் கேள்விக் குறிதான். இதுவரை நடந்துள்ளவைகூட, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளினாலேயே நடந்துள்ளன.
இரு வருடங்களாக ராசா தொடர்பான முறைகேடுகளை. பயனீர் ஆங்கில ஏட்டில் நிருபர் கோபிகிருஷ்ணன் விவரமாக எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
டிசம்பர் 11,2008 :
ராசா 2004ல் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பொறுப்பேற்ற நான்கு மாதங்கள் கழித்து உருவான நிறுவனம்தான் கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ். இதன் முதலீடு வெறும் ஒரு லட்சம் ரூபாய்கள். ராசாவின் நண்பர் சாதிக் பாஷா நிர்வாக இயக்குனர். பாஷாவின் மனைவி, ராசாவின் சகோதரர் கலியபெருமாள், மருமகன் பரமேஷ் குமார், ராசாவின் மூத்த சகோதரர் ராம சந்திரனின் மகன் ராம் கணேஷ், மருமகள், உறவுமுறையினர் பலரும் இதில் இயக்குனர்கள். கம்பெனி தொடங்கி 14 மாதங்களில் அதன் முதலீடு மூன்று கோடி ஆகிவிட்டது. ராசாவின் மனைவி பரமேஸ்வரி பிப்ரவரி 2007ல் இயக்குனராக்கப்பட்டார். நிறுவனம், அமைச்சர் ராசாவின் அதிகாரபூர்வமான வீட்டு முகவரியிலிருந்தே இயங்கி வருகிறது. விதிகளின்படி ராசா இந்தத் தகவல்களை பிரதமரிடம் தெரிவிக்கவே இல்லை. அமைச்சர் சிவராஜ் பட் டீலின் மகன் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவர் முகவரியில் இயங்கிவருவது பற்றி செய்தி வெளியானதும் ராசா திடுக்கிட்டார். அதையடுத்து ராசாவின் மனைவியின் பங்குகள் ராசாவின் மருமகனாகிய அரசு வழக்கறிஞரின் மனைவி மலர்விழிக்கு மாற்றப்பட்டன.
திடீரென்று நான்கே வருடங்களில் தி.நகர் கனரா வங்கிக் கிளை கணக்கில் இந்த கம்பெனிக்கு 150 கோடி ரூபாய் வரவு மத்திய கிழக்கு நாடுகள், ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளிலிருந்து வந்தது. கம்பெனி சிங்கப்பூரிலும் கிளை தொடங்கியது.
கிரீன்ஹவுஸ் கம்பெனி தொடங்கி சில மாதங்களிலேயே இன்னொரு கம்பெனி தொடங்கப்பட்டது. இதிலும் ராசாவின் மனைவியும் இதர உறவினர்களும் முக்கியஸ்தர்களும் இயக்குனர்கள். இந்த முறையும் விதிப்படி பிரதமருக்கு ராசா தகவல் தெரிவிக்கவில்லை. இந்த கம்பெனியும் நில பேர வர்த்தகத்தில் ஈடுபட்டது. முதல் வருடத்திலேயே இதில் 755 கோடி ரூபாய்கள் புரண்டன!
டிசம்பர் 16,2008:
அந்த கம்பெனியின் பெயர் ஈக்வஸ் எஸ்டேட்ஸ். என்ன தயாரித்தார்கள், என்ன விற்றார்கள், என்ன சேவை வழங்கினார்கள், எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்ற விவரங்கள் பதிவாளருக்கு 23 ஏசி படிவத்தில் சட்டப்படி தெரிவிக்கப்படவில்லை.
அலைக்கற்றை 2G லைசன்ஸை சர்ச்சைக்குரிய விதத்தில் பெற்ற ஸ்வான் டெலிகாம், கிரீன்ஹவுஸ் கம்பெனியில் ஆயிரம் கோடி ரூபாய் விலையில் 49 சத விகிதப் பங்குகளை வாங்கப்போவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி பயனீர் நிருபர் ஃபோனில் கேட்டபோது யார் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று தெரிவிக்க முடியாது என்று சாதிக் பாஷா, கம்பெனி ஆலோசகர் கெவின், ஸ்வான் டெலிகாம் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஷாஹித் பல்வா மூவரும் மறுத்துவிட்டனர். ஸ்வான் கம்பெனி அக்டோபரில் 13 வட்டங்களுக்கான லைசன்ஸை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய சில வாரங்களிலேயே தம் 45 சதவிகிதப் பங்குகளை ஐக்கிய அரபுக் குடியரசு டெலிகாம் கம்பெனியான எடிசலாட்டுக்கு 4500 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.
இன்னொரு நில பேர கம்பெனியான யூனிடெக்கும் 22 வட்டங்களுக்கான லைசன்ஸை 1651 கோடிக்கு வாங்கிய சில வாரங்களில் தம் கம்பெனியின் 60 சதவிகிதப் பங்குகளை நார்வே கம்பெனியான டெலினாருக்கு 6120 கோடிக்கு விற்றுவிட்டது. டெலினார், பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் இயங்கும் கம்பெனி. ராசா டெலிகாம் மந்திரியான இரு வருடங்களில் பல நில பேர கம்பெனிகள் டெலிகாம் துறைக்கு வரத் தொடங்கின. விதிகள் பல மீறப்பட்டன. இது பற்றி பிரதமரிடமே பழைய டெலிகாம் கம்பெனிகள் புகார் செய்தன. டெலிகாம் துறையில் ஏகபோகத்தை நீக்கவே, தாம் இப்படிச் செய்வதாக ராசா கூறினார். தமக்கும் கிரீன் ஹவுஸ் கம்பெனிக்கும் தொடர்பில்லை என்று மறுத்தார். தம் மனைவி இயக்குனர்(சட்டம்) என்ற பொறுப்பையே வகித்ததாகத் தெரிவித்தார். அவருக்கு கம்பெனியில் பங்கு இல்லை என்று சாதிக்பாஷா கூறினார்.
டிசம்பர் 18,2008:
ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் முறைகேட்டில் அமைச்சர் ராசாவின் ராஜினாமா கோரி பெரும் சர்ச்சை உள்ளது. இப்போது அவர் அரசின் பி.எஸ்.என்.எல். கம்பெனிக்குச் சொந்தமான அலைக்கற்றையைத் தமக்கு வேண்டிய ஸ்வான் கம்பெனிக்கு ஏறத்தாழ இலவசமாகத் தர வழி செய்துள்ளார். வட்டங்களுக்கிடையிலான உலாவும் வசதிக்கான ஒப்பந்தம் என்ற பெயரில் ஸ்வானுக்கு பி.எஸ்.என்.எல்லின் சேவை வசதி தரப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஸ்வானுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை. பி.எஸ்.என். எல். தலைவர் கோயல், கட்டணம் பின்னர் பார்த்துக் கொள்ளப்படும் என்றார். இந்த ஒப்பந்தத்தைக் காட்டித்தான் ஸ்வான் தம் பங்குகளை எடிசலாட்டுக்கு விற்றிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் குஷ்வாஹாவும் ஜாவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
ஜனவரி 12,2009
ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவரது உறவினர் ஸ்ரீதர் அதே அமைச்சகத்தில் டெபுடி டைரக்டர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். கோவை ஷெல்ட்டர்ஸ் கம்பெனியில் 15 சதவிகிதப் பங்குகளுடன் தான் இயக்குனராக இருப்பதை அவரும் ராசாவும் பிரதமரிடம் மறைத்துவிட்டனர். ஜனவரி 2007ல் தொடங்கிய இந்த கம்பெனியின் தலைவர், ராசாவின் பெரம்பலூர் நண்பரான டாக்டர் சி.கிருஷ்ணமூர்த்தி.
தற்போது திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருக்கும் கண்ணனிடம் பி.எச்.டி., செய்த ஸ்ரீதர், அவரிடம் ஐந்தாண்டுகள் பணி செய்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பதவியைப் பெற்றுள்ளார். ராசாவின் மருமகள்கள் ஆனந்தபுவனேஸ்வரி, சந்தான ல‌க்ஷ்மி ஆகியோருக்கும் கோவை கம்பெனியில் தலா 15 சதவிகிதப் பங்கு உள்ளது. கம்பெனியின் தலைவர் கிருஷ்ண மூர்த்தியின் கட்டடத்தில்தான் ராசா வக்கீலாக இருந்தபோது ஆபீஸ் வைத்திருந்தார். இந்த கம்பெனிகள் எல்லாம் ராசா அமைச்சரானதும் தொடங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 29,2009:
வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீட்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெனெக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் என்ற தமிழ்நாட்டு கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் உள்ள ஸ்வான் கம்பெனியின் 380 கோடி ரூபாய் பங்குகள் தரப்பட்டுள்ளன.
கீழக்கரையைச் சேர்ந்தவர்களான முகமது ஹாசன், அகமது ஷகிர் இதன் இயக்குனர்கள். ஸ்வான் போர்டில் எக்சிம் சார்பாக இருப்பவர் சையத் சலாவுதீன். அகமத் சையத் சலாவுதீன் துபாயில் இருக்கும் தமிழர் சையத் முகமது சலாவுதீனின் மகன். சையதின் ஈ.டி.ஏ அஸ்கான் ஸ்டார் குழுமம் தமிழ்நாட்டில் பல நில பேர கம்பெனிகளை தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், ராசா சுற்றுச்சூழல் அமைச்சரானதும் தொடங்கியது. தமிழ்நாட்டில் 3750 கோடி ரூபாய் மதிப்பில் காஞ்சிபுரம் அருகே 500 ஏக்கரில் ஐ.டி மண்டலம் தொடங்க அரசுடன் ஈ.டி.ஏ. மே மாதம் 2007ல் ஒப்பந்தம் போட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். இவ்வளவு பெரிய கம்பெனி ஏன் வெறும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு உள்ள ஜெனெக்ஸைக் கொண்டு ஸ்வான் நிர்வாகத்தில் நுழைய வேண்டுமென்பது மர்மமாக இருக்கிறது. ஸ்வானின் 10 சதவிகிதப் பங்கை வாங்க ஜெனெக்ஸுக்கு எங்கிருந்து வருவாய் என்று கேட்டால் பதில் தர மறுத்துவிட்டார்கள். முன்னதாக கிரீன்ஹவுஸ் கம்பெனியில் பங்கு வாங்க ஸ்வான் முற்பட்டதை பயனீர் அம்பலப்படுத்தியதும் அம்முயற்சி கைவிடப்பட்டது.
மார்ச் 5, 2009:
அமைச்சர் ராசாவின் நண்பர்களின் கம்பெனிக்கு பி.எஸ்.என்.எல். கம்பெனியின் வைமேக்ஸ் சேவைகள் குறைந்த விலைக்குத் தரப்பட்டுள்ளன. வெல்காம் கம்யூனிகேஷன்ஸ் என்ற கம்பெனிக்கு வருவாயில் 75 சதவிகிதம்; பி.எஸ்.என்.எல்லுக்கு 25 சதவிகிதம் என்பது ஒப்பந்தம். செல் ஃபோனுக்கும் கணினிகளுக்கும் வயர்லெஸ் இண்டர்நெட் சேவை தருவதே வைமாக்ஸ். நவம்பர் 2008ல் விண்ணப்பித்த வெல்காம் கம்பெனிக்கு 2006ல் 10 லட்சம் முதலீடு. இது 2008ல் 10 கோடி ஆனது. ராசாவின் பெரம்பலூர் நண்பர் செல்வராஜு என்பவரிடம் 15 சதவிகிதப் பங்குகள். இவர் இன்னொரு நண்பர் கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான கல்குவாரியில் இருந்து கல் சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். டத்தோ விஜயகுமார் ரத்னவேலு, குணசேகரன், தியாகராஜன் என்ற மலேசியத் தமிழர்கள் இயக்குனர்கள்.
மேலே உள்ள செய்திகள் எல்லாம் 2008-2009ல் வெளியானவை. அப்போது ரெய்டு செய்யாமல் இப்போது செய்தால் என்ன சிக்கும் என்பது சி.பி.ஐக்கே வெளிச்சம்.
நீரா ராடியா டேப்புகளில் இருந்து துல்லியமாகத் தெரியவரும் உண்மை- தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், ராசாவுக்கு டெலிகாம் அமைச்சர் பொறுப்பைப் பெற்றுத் தந்தே தீரவேண்டுமென்று கனிமொழி கடுமையாகப் பாடுபட்டிருக்கிறார். தற்கொலை செய்வேன் என்றே மிரட்டியதாக ஒரு டேப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
நம் அரசியல்வாதிகளுக்குத் தொலைநோக்குப் பார்வை கிடையாது என்று யார் சொன்னது ?
அவர்களுக்கு உண்டு. சி.பி.ஐக்கும் நமக்கும்தான் அதெல்லாம் கிடையாது.

No comments:

Post a Comment