FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, January 28, 2010

தமிழ் மாநிலச் செயற்குழு - 24, 25 ஜனவரி

ஜனவரி 24, 25 தேதிகளில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் INTUC மாவட்டக் கவுன்சில் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. முதல்நாள் மாநிலத் தலைவர் தோழர் அப்துல் வகாப்பும் இரண்டாம் நாள் மாநிலச் செயல் தலைவர் தோழர் K.R.பழனிச்சாமி யும் தலைமை வகித்துக் கூட்டத்தைத் திறம்பட வழிநடத்தினர். INTUC சேலம் மாவட்டக் கவுன்சில் தலைவர் திரு கல்யாணசுந்தரம் துவக்கவுரை நிகழ்த்தி னார். தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடிய அரசாங்கத்தின் கொள்கை முடிவு களை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடவும் தயார் என்ற INTUC-யின் அகில இந்தியத் தலைவர் திரு சஞ்சீவரெட்டியின் அறைகூவலைச் சுட்டிக் காட்டிப் பேசிய அவரது துவக்கவுரை அனைவரது சிந்தனையையும் தட்டி யெழுப்பியது. INTUC -யின் சேலம் மாவட்டப் பொதுச்செயலர் திரு சொர்ண ராஜின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, நமது பொதுச்செயலர் தோழர் வள்ளி சிறப்புரையாற்றினார். உருப்படாத ஊதிய உடன்பாடு உள்ளிட்ட அனைத்து விசயங்கள் பற்றியும், ஊழியர் விரோத BSNLEU-வின் துரோகம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். பொருளாய்வுக்குழுவில் மாநிலச் செயலர் தோழர் சந்திரசேகரன் செயல்பாட்டு அறிக்கையை வாசிக்க, தொடர்ந்து மாவட்டச் செயலர்களும், மாநில நிர்வாகிகளும் விவாதத்தில் பங்கேற்றனர். அமைப்புநிலை, நிதிநிலை, கூட்டணியின் செயல்பாடு, நிர்வாகத்துடனான உறவு, மகளிர் அணி, ஒப்பந்தத் தொழிலாளர், ஓய்வு ஊதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செழுமையான விவாதங்கள் நடைபெற்றன. அகில இந்திய உதவிப் பொதுச்செயலர் தோழர் ஆண்டியப்பன் எழுச்சியுரையாற்ற, மாநிலச் செயலர் விவாதங்களைத் தொகுத்துப் பதிலளித்தார். இறுதியாக, பொதுச்செயலர் நிறைவுரையாற்ற, தேசியச் சங்கப் பதாகையை உயர்த்திப் பிடிப்போமென்ற உணர்வு கொப்பளிக்க, கூட்டம் முடிவுற்றது. உருவிலே சிறிதாக இருந்தாலும் உன்னதமான ஏற்பாடுகளைச் செய்து அசத்திட்ட சேலம் மாவட்டச் சங்கத்திற்கு நமது நன்றிகள்.

No comments:

Post a Comment