எது மாதிரியும் இல்லாமல், புதுமாதிரியாய் இந்த ஆண்டு தீபாவளி...
முன்பெல்லாம் போனஸ் வாங்கி தீபாவளி கொண்டாடினோம். கூடுதலாக விழாக்கால கடன் வேறு. கடந்த சில ஆண்டுகளாக போனஸ் இல்லை, இந்த ஆண்டு விழாக்கால கடனும் இல்லை.
முந்தைய காலங்களில் மாதக்கடைசியில் தீபாவளி வந்தால் அந்த மாதச் சம்பளத்தை முன்கூட்டியே வாங்கிய வரலாறும் உண்டு. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட போன மாதச் சம்பளத்தை தீபாவளிக்கு முன்னதாக வழங்குமாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கியதும் ஒரு வரலாறு ஆனது.
நிரந்தரத் தொழிலாளர்களின் நிலைமையே இதுவென்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம். விட்டேனா பார் என்று வீரவசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடும் அவல நிலை.
BSNL-க்கு மூடுவிழா என்று தீயாய் பரவிய வதந்திகள், சம்பளம் போடக்கூட பணமில்லை என்ற ஒன்றை பத்தாக்கி கடன் சுமையில் தத்தளிக்கும் BSNL என்று பீதியை கிளப்பிய ஊடகங்கள், அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என நினைத்து காசு கொடுத்து வதந்தி பரப்பிய சில தனியார் நிறுவனங்கள்.
இந்த சூழ்நிலையில், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வந்தே விட்டது. இந்த ஆண்டு தீபாவளி உண்மையாகவே நமக்கு இனிய தீபாவளி என்றே சொல்ல வேண்டும்.
BSNL நிறுவனமானது இழந்த பொலிவை மீண்டும் பெற்று நீடித்து நிலைத்து நிற்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நமது சிந்தனையில்/பார்வையில் மாற்றம் தேவை, தடுமாற்றம் தேவையில்லை. வரவு குறையும் போது செலவும் குறைய வேண்டும் என்பது நியதி.
BSNL நமது நிறுவனம், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் கசப்பு மருந்து சாப்பிட்டே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
அடுத்த தீபாவளி அனைவருக்கும் - வெளியேறுவோர் உள்ளேயிருப்போர் அனைவருக்கும் - நிச்சயம் இனிய தீபாவளியாக இருக்கும் என நம்புவோம். காலம் வெல்லும்.