FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, February 16, 2018

4-வது தமிழ் மாநில மாநாடு - மதுரை


FNTO தேசிய BSNL தொழிலாளர் சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு மதுரை, சர்வேயர் காலனி, வசந்த வினோதன் ஹாலில், தோழர் S.ராஜு மற்றும் தோழர்  A.S.சையது அலி நினைவு அரங்கத்தில் பிப்ரவரி 10, 11 தேதிகளில் வெகு விமரிசையாக வெற்றிகரமாக நடைபெற்றது. பிப்ரவரி 9-ம் தேதி மாலை நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து மறுநாள் 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு இனிதே தொடங்கியது.

தோழர் K.P.கருப்பையா மற்றும் தோழர் N.நீதிநாதன் நுழைவு வாயிலில் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ”மக்கள் மருத்துவர்”  டாக்டர் P.சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளருமான தோழர் S.லிங்கமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம் தோழர் A.S.சையது அலி நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்தவுடன் விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

மாநிலத் தலைவர் தோழர் M.அப்துல் வஹாப் மாநாட்டு தலைமையேற்க, FNTO-E3 சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் T.தேவராஜன் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் A.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு பொதுச்செயலாளரும் மதுரை மாவட்டச் செயலாளருமான தோழர் S.முத்துக்குமார் வரவேற்புரையாற்ற, மகளிரணித் தலைவி தோழியர் G.மீனாட்சி அஞ்சலி உரையை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் P.சரவணன் மாநாட்டைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் தன்னுடைய உரையில், அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யவேண்டுமென்ற கருத்தை முன்வைத்தார்.

நிர்வாகத்தின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திருமதி S.E.ராஜம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளர் தோழர் S.லிங்கமூர்த்தி, BDPA(India) பொதுச்செயலாளர் தோழர் D.D.மிஸ்திரி, BSNLEC பொதுச்செயலாளர் தோழர் M.இராமசுந்தரம்,  DMTNPLCLR சங்கத் தலைவர் பொன்.இளங்கோவன், சென்னை சொஸைட்டி தலைவர் தோழர் S.வீரராகவன் ஆகியோரும்  NFTE மாநிலச் செயலாளர் தோழர் K.நடராஜன், BSNLWRU மாநிலச் செயலாளர் தோழர் G.P.பாஸ்கரன் உள்ளிட்ட இதர தோழமைச் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

மதிய உணவுக்குப் பிறகு, பொருளாய்வுக் குழுவை அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K துவக்கிவைத்தார். அவர் தன்னுடைய உரையில், தொழிலாளர்களுடைய தனிநபர் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதன் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ஆலோசனை வழங்கினார். மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலச் செயலாளருமான தோழர் D.சந்திரசேகரன் ஆண்டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, செழுமையான விவாதங்களுக்குப் பிறகு அவற்றை ஏகோபித்த கரகோஷத்தின் மூலம் அவை ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். பிறகு இரவு உணவுக்காக அவை ஒத்திவைக்கப் பட்டது.

மறுநாள் அவை மீண்டும் கூடியதும், முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம்  பொருளாய்வுக் குழுவைத் துவக்கிவைத்து, FNTO-விலும் BDPA-விலும் தான் இனிமேல் தீவிரமாக செயல்பட உள்ளதாக அறிவித்தார். மாவட்ட, மாநில நிர்வாகிகளின் கருத்துரைகளுக்குப் பிறகு, மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து பொருளாய்வுக் குழு நடைபெற்றது.

மாலையில், பொதுஅரங்கு நிகழ்ச்சியை அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K துவக்கிவைத்தார். சிறப்புரையாற்றிய அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலவிரயம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, இதில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அக்கறையின்மையையும் சுட்டிக் காட்டினார். இருந்தபோதும், பொதுநோக்கம் கருதியும் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டும் அவை அறிவித்த போராட்டங்களில் FNTO-வும் கலந்துகொள்ள நேரிட்டதை விளக்கினார்.

தொலைத்தொடர்பு தொழிலாளர்களின் தோழனாக விளங்கிய முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஆ.ராசா பொதுஅரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு வரவேற்புக் குழுவின் சார்பில் ஆளுயர மாலையும், அனைத்து மாவட்டங்களின் சார்பில் சால்வைகளும் அணிவிக்கப் பட்டு, உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் வரவேற்புரையை வாசிக்க, முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம் மற்றும் மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் ஆகியோர் திரு ஆ.ராசா அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் தொழிலாளர்களுக்கு கிடைத்த ஏராளமான நன்மைகள் குறித்து சிலாகித்துப்பேசி, அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இறுதியாக, புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மாநிலத் தலைவர்:                தோழர் D.சந்திரசேகரன், SA Retd., வேலூர்
மாநிலச் செயலாளர்:            தோழர் R.ஜெயபாலன், OS, கடலூர்
மாநிலப் பொருளாளர்:         தோழர் S.பார்த்திபன், OS, CGM(O), சென்னை

மதுரை மாவட்டச்  செயலாளர் தோழர் S.முத்துக்குமார் தலைமையில் தோழர்கள் E.பர்குணன், S.K.தீனதயாளன், K.ஸ்டாலின், A.மருதுமணிகண்டன், P.பிச்சை, A.மனோகரன் உள்ளிட்ட வரவேற்புக் குழுவினர் மாநில மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை அருமையாகச் செய்திருந்தனர். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

புதிய நிர்வாகிகளின் முழுப் பட்டியல் தனியே கொடுக்கப் பட்டுள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் விபரமும் தனியே கொடுக்கப் பட்டுள்ளது.