FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, August 17, 2019

தமிழ் மாநிலச் செயற்குழு - 10/08/2019 - மதுரை


FNTO சங்கத்தின் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 10/08/2019 சனிக்கிழமையன்று கூடல்மாநகர் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய இணைப் பொதுச் செயலாளரும் தமிழ் மாநிலத் தலைவருமான  தோழர் D.சந்திரசேகரன் தலைமை வகிக்க, மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன் வரவேற்புரையாற்றினார். காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் செயற்குழுவைத் துவக்கி வைக்க, முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளரும் சங்க வழிகாட்டியுமான தோழர் K.வள்ளிநாயகம் சிறப்புரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் தோழர் M.நயினார் அமைப்புநிலை விவாதத்தை தொடங்கிவைக்க, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களும், மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் விவாதங்களில் கலந்துகொண்டு தமது செழுமையான கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக, மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன் விளக்கவுரையாற்றிடவும், மாநிலப் பொருளாளர் தோழர் S.பார்த்திபன் நன்றிநவில கூட்டம் இனிதே நிறைவடைந்தது. மதுரை மாவட்டச் சங்கம் மாநிலச் செயற்குழுவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

மாநிலச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. BSNL நிர்வாகம் உடனடியாக அனைத்து பதிவுபெற்ற சங்கங்களையும் அழைத்து, “3-வது ஊதிய உயர்வு” பற்றிய பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.
2. BSNL நிர்வாகம் உடனடியாக அனைத்து பதிவுபெற்ற சங்கங்களையும் அழைத்து, “BSNL-ன் புனரமைப்பு” பற்றிய பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.
3. அதே சமயம், BSNL-ன் அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியை DOT நிர்வாகம் ஒதுக்கித் தரவேண்டும். மேலும், BSNL-ன் Network சேவை பாதிக்காமலும், BSNL-க்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் கிடைப்பதற்கும் DOT நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
4. பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்.