FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, July 22, 2017

அகில இந்தியச் செயற்குழு - 2017 ஜூலை 7 & 8 - பாட்னா

FNTO சங்கத்தின் அகில இந்தியச் செயற்குழு 2017 ஜூலை 7 மற்றும் 8-ம் தேதிகளில் பீஹார் தலைநகர் பாட்னாவில் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான் தலைமை வகிக்க, மத்திய சங்கப் புரவலர் தோழர் M.R. வஷிஸ்ட் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் தோழர் K. ஜெயப்பிரகாஷ் இடைக்கால செயல்பாட்டு அறிக்கையை வாசிக்க, நிதிச் செயலாளர் தோழர் P.C.பாதக் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

தமிழ் மாநிலத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன், காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன், காரைக்குடி கிளைச் செயலாளர் தோழர் A.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்ற மாநிலச் செயலாளர்களும், மத்தியச் செயற்குழு உறுப்பினர்களும் விவாதங்களில் கலந்துகொண்டு தமது செழுமையான கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் இணைப் பொதுச் செயலாளர் பதவியிலும் இருப்பதால், காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் பொறுப்பு மாநிலச் செயலாளராக செயற்குழுவில் தமிழ் மாநிலத்தின் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

தலமட்டங்களில் நிலவும் சுமூகநிலையைப் பொறுத்து, செயல்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில், பொதுப் பிரச்சினைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் இதர சங்கங்களுடன் சேர்ந்து செயல்படுவது எனவும், BSNLEU-வுடனோ அல்லது NFTE-வுடனோ தற்போதைக்கு கூட்டணி இல்லை எனவும்  அகில இந்தியச் செயற்குழுவில் முடிவெடுக்கப் பட்டது. பீஹார் மாநிலச் சங்கம் அகில இந்தியச் செயற்குழுவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


அகில இந்தியச் செயற்குழு மற்றும் பீஹார் மாநில மாநாட்டை முன்னிட்டு  பாட்னாவில் ஜூலை 7-ம் தேதி மாலை 3.30 மணியளவில் பொது அரங்கம் நிகழ்ச்சி (Open House Session) நடைபெற்றது. 400-க்கும் அதிகமான தோழர்கள் பங்கேற்றனர். அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் K. ஜான், பொதுச் செயலாளர் தோழர் K. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பீஹார் மாநிலத் தலைமைப் பொது மேலாளர் (CGMT/Bihar), பாட்னா முதன்மைப் பொது மேலாளர் (PGMTD/Patna), NFTE பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங் ஆகியோர் வருகை தந்து கடைசிவரை இருந்து வாழ்த்திச் சிறப்பித்தனர். மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை கூட்டம் கலையாமல் அமைதி காத்தது ஈண்டு குறிப்பிடத் தக்கது.