FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Thursday, March 8, 2018

தமிழ்நாடு CGM உடன் புதிய நிர்வாகிகள் சந்திப்பு

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ்மாநில நிர்வாகிகள் கடந்த 17/02/2018 அன்று சென்னையில் தமிழ்மாநில CGMT திரு R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்களையும் GM(HR) உள்ளிட்ட இதர அதிகாரிகளையும் சந்தித்தனர். புதிய மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன் CGMT-க்கு சால்வை அணிவித்தார்.

















இந்தச் சந்திப்பில், மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம், சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளர் தோழர் S.லிங்கமூர்த்தி, மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் D.சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன், மாநில இணைச் செயலாளர்கள் தோழர் G.முத்துக்குமரன் மற்றும் தோழர் M.நயினார், மாநில உதவிச் செயலாளர் தோழர் V.V.S., மாநிலப் பொருளாளர் தோழர் S.பார்த்திபன், மாநில உதவிப் பொருளாளர் தோழர் P.K.கேசவன் மற்றும் விழுப்புரம் தோழர் D.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, March 2, 2018

மதுரை மாநாட்டு தீர்மானங்கள்


FNTO-வின்  4-வது தமிழ் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.    BSNL தொழிலாளர்களின் ஊதிய மாற்றம்:
பொதுத்துறைஅதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து 3-வது ஊதிய மாற்றக்குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு உத்தரவு வெளியிட்டதின் அடிப்படையில் BSNL அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டு DOT-யின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. ஆனால், BSNL தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் அளிப்பதற்கு நிர்வாகமும் ஊழியர் தரப்பும் இணைந்த ஒரு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்ய வேண்டும். 26/12/2016 அன்றே நிர்வாகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட பிறகு, ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூட அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் இன்னும் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்காமல் இழுத்தடிப்பது, ஊதிய மாற்றம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அக்கறையின்மையையே காட்டுகிறது. எனவே, அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உடனடியாக அமைத்து ஊதிய மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு BSNL நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2.    துணை டவர் கார்ப்பரேஷன்:
நாடாளுமன்றத்தில் BSNL-ன் துணை டவர் கார்ப்பரேஷன் குறித்த கேள்விக்கு பதிலளித்த தகவல்தொடர்பு அமைச்சர், துணை டவர் கார்ப்பரேஷன் அமைப்பதை BSNL தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள போது, அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டி தொழில் அமைதியைக் குலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் இரட்டை வேடத்தைக் கண்டிக்கின்ற அதேவேளையில்,  துணை டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெறவே முடியாத சூழல் ஏற்பட்டால் அப்போது துணை டவர் கார்ப்பரேஷனின் கணக்கு வழக்குகளை BSNL-ன் நிதிநிலை அறிக்கையிலேயே இணைத்துக் காண்பிக்க வேண்டும் என இச்செயற்குழு BSNL-ஐயும் DOT-யையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

3.    ஓய்வு வயது 60-லிருந்து 58-ஆகக் குறைப்பு:
அதுபோன்ற எண்ணம் எதுவும் BSNL நிர்வாகத்திற்கு இல்லையென CMD பலமுறை அறிவித்த பிறகும் கூட, ஓய்வு வயது 60-லிருந்து 58-ஆகக் குறைக்கப்படப் போகிறது என்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பொய்ப்பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. சட்டத்தின் படி, DOT-யிலிருந்து BSNL-க்கு வந்த ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆகத்தான் இருக்கிறது. எனவே, BSNL-ன் தொழில் அமைதியைக் காக்கும் வகையில், ஓய்வு வயது 60 தான் – அதில் மாற்றமில்லை என்றதொரு தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4.    நான்குகட்டப் பதவியுயர்வு:
முன்பிருந்த பதவியுயர்வு திட்டங்களில் இருந்த உயர் சம்பள விகிதம் போன்ற சலுகைகளை ஒழித்துவிட்டு ஏற்படுத்தப்பட்ட தற்போதுள்ள நான்குகட்டப் பதவியுயர்வு திட்டமானது BSNL தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற காரணத்தால், அதை ரத்துசெய்துவிட்டு, முன்பிருந்த உயர் சம்பள விகிதம் போன்ற அதிப்படியான பலன்களைத் தரக்கூடிய வகையில் புதிய பதவியுயர்வு திட்டத்தை அமல்படுத்துமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

5.    சராசரி சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பலன்கள்:
பல்லாண்டுகளாக, JTO-வாக தற்காலிகப் பதவியுயர்வு பெற்று பணியாற்றி வந்த TTA தோழர்களும், JAO-வாக தற்காலிகப் பதவியுயர்வு பெற்று பணியாற்றி வந்த Sr.Accountant மற்றும் Sr.TOA தோழர்களும், தங்களது நிரந்தர ஊதியத்தை விடவும் கூடுதலாக ஊதியம் பெற்று வந்தார்கள். அவ்வாறு அவர்கள் பெற்றுவந்த சராசரி ஊதியத்தின் அடிப்படையில் சட்டரீதியான கூடுதல் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் தமிழ்மாநில DOT Cell மறுதலிப்பது சரியில்லை. எனவே, ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து உரிய நியாயம் வழங்குமாறு தமிழ்மாநில DOT Cell-ன் Pr.CCA-வை  இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6.    இரண்டாம்கட்ட பதவியுயர்வு (BCR) பெற்றவர்களுக்கு கூடுதல் இன்கிரிமெண்ட்:
கிரேடு-IV (10% BCR) பதவியுயர்வு பெறாத Sr.TOA/TTA-களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் தேதிக்கு முன்பாக கடைசி ஓராண்டுக்கு கிரேடு-IV பதவியுயர்வுக்கு பதிலாக ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட் வழங்கப்பட்டு, அது ஓய்வூதிய பலன்களை கணக்கிடுவதற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், 78.2% IDA-வில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது அந்த கூடுதல் இன்கிரிமெண்ட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று DOT Cell மறுதலிப்பதால், ஓய்வூதிய மாற்றம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே DOT-யால் வழங்கப்பட்ட பணப்பயன்களை தற்போது DOT Cell மறுதலிப்பது அநியாயமாகும். எனவே, தமிழ்மாநில நிர்வாகமும் கார்ப்பரேட் அலுவலகமும் தலையிட்டு தமிழ்மாநில DOT Cell-ன் Pr.CCA-க்கு உரிய தாக்கீது அனுப்பி, கூடுதல் இன்கிரிமெண்ட்டை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியத்தை திருத்தியமைத்து  விரைந்து நியாயம் கிடைக்கச் செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7.    ஒப்பந்த தொழிலாளர்கள்:
BSNL-ல் நிரந்தர வேலைகளைச் செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் காண்ட்ராக்டர் மூலமாக நியமிக்கப் படுகிறார்கள். இந்த நடைமுறை ”ஒப்பந்த தொழிலாளர்கள் வரன்முறைப் படுத்தல் மற்றும் நீக்குதல்” சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் முழுமையாகப் போய்ச்சேருவதில்லை. இடைத்தரகர்களைப் போன்று செயல்படும் காண்ட்ராக்டர்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் சுரண்டப் படுவதைத் தவிர்க்கவும், ஒப்பந்த தொழிலாளர்களே முழுப் பணப்பலன்களையும் அடைவதை உறுதிசெய்யவும், நிர்வாகமே நேரடியாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்திட வேண்டுமென  இச்செயற்குழு வலியுறுத்துகிறது.