இந்திய தபால் தந்தி தொலைபேசி வரலாற்றில் முத்திரை பதித்து அந்த தொழிலாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கமாக அதன் ஆணிவேராகத் திகழ்ந்து மறைந்த நமது பாசமிகு தலைவர் திரு கே.ராமமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்மாநில தேசிய சங்கத்தின் சார்பில் காரைக்குடியில் இன்று 11-8-2012 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தியாகமே வாழ்வாக அமைந்த அந்தப் பெருமகனாரின் நினைவாக காரைக்குடி மாவட்ட சங்கம் காரைக்குடி அரிமா சங்கத்துடன் இணைந்து இரத்த தான முகாம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தது.விழாவின் சிறப்பு அம்சமாக அமைந்தது. அரிமா சங்கத்தாரும், அரசு மருத்துவ மனை மருத்துவருமே வியந்து பாராட்டுகிற அளவில் 29 தோழர்கள் இரத்த தானம் செய்தார்கள். தமிழ் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 350க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கி, தபால் தந்தி ஊழியர்களின் வாழக்கை மேம்பாடே தன் சுவாசமாகக் கொண்டு உழைத்திட்ட அமரர் திரு கே.ஆர் அவர்களைப் போற்றிப் பாராட்டிய இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது எங்கள் தலைவனுக்கு எடுக்கும் விழா, எங்களுக்கு என்ன வயதானால் என்ன, எங்கள் உடல்நிலை எப்படி இருந்தால் என்ன வந்து அவரைப் போற்றுவது எங்கள் கடமை என்று வயதில் முதிர்ந்த தோழர்கள் குருஜி கனகசொரூபன், சோமசுந்தரம், சையது அலி, ஏ.கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி ஆண்டியப்பன் மதுரை பி.எஸ்.எஸ் ஆகியோர் வந்திருந்து சிறப்புரை ஆற்றினர். ஏற்றமிகு என் தலைவனுக்கு ஒரு விழா என்றால் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காது வந்து அவரைப் போற்றுவேன் என்று வந்து சிறப்பித்த நமது முன்னாள் பேராண்மைச் செயலர் திரு ஆர்.வெங்கட்ராமன், இன்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாலும் பரவாயில்லை அன்று தன் வழிகாட்டலாலே பாய்ந்தோடிக் காரியம் சாதிக்கவைத்து அவையில் முந்தியிருப்பச் செய்த அந்த ஒப்பற்ற தலைவனைப் போற்றி நன்றி சொல்ல வருவேன் என்று வந்த திருச்சி மீனாட்சி, ஊழியருக்கு உழைக்க உத்வேகம் கற்றுக் கொடுத்தவரை நினைவுகூர வந்த லிங்கமூர்த்தி, கோவை டி.வி. கிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் தேவராஜன், அன்புத் தலைவர் கே.ஆர் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு பல நேரங்களில் அவருக்கே ஆலோசனைகள் தரும் அளவுக்கு உயர்ந்த தமிழ் மாநிலச் செயலர் சந்திர சேகரன், விழாவுக்குத் தலைமையேற்ற மாநிலத் தலைவர் திருச்சு வஹாப் என வந்திருந்த அனைவரையும் அன்புடன் காரைக்குடி மாவட்டச் செயலரும் விழாப் பொறுப்பாளருமான தோழர் முத்துக்குமரன் வரவேற்றார். வரவேற்புரையை இங்கே கேட்கலாம்.
அதன்பின் விழா மிகச் சிறப்பாகத் தொடங்கி தலைவர் கே.ஆர் அவர்கள் பற்றி அறிந்திராத பல செய்திகளை வந்திருந்த பெரியவர்கள் அவையோர் அனைவரும் அறிந்து உணர்ந்து ஆனந்தப் படுகிற வகையில் சிறப்புரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக தலைவர் திரு கே.ஆர் அவர்களைப் பற்றி அவருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் எழுதிய கட்டுரைகளுடன் ஒரு சிறப்பு மலரை முன்னாள் மாநிலத் தலைவர் தேவராஜன் வெளியிட இராமநாதபுரம் இரகுவீரதயாள் பெற்றுக் கொண்டார்.
தலைவர்கள் ஆற்றிய அற்புதமான சிறப்புரைகள் நாளை முதல் தினமும் இங்கு வெளியாகும். அதற்கு முன், அனேகமாக இந்திய தபால் தந்தி இயக்கத்தின் வரலாறு என்று சொல்லக்கூடிய அளவில் அமைந்துள்ள இந்த சிறப்பு மலரை இங்கு படிக்கலாம்.
கிளைச் செயலர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். இதை அச்சிட்டு தினம் ஒரு பக்கமாக தகவல் பலகையில் வெளியிடுங்கள். நம்மைப் பற்றியும் தலைவர் கே.ஆர் அவர்களைப் பற்றியும் உண்மை உணராத மாற்றுச் சங்கத்தாரின் பொய்களிலே மயங்கிக் கிடக்கும் பல தோழர்களுக்கு அது விழிப்பூட்டும்.
KR
No comments:
Post a Comment