FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, October 27, 2019

புதுமாதிரி தீபாவளி 2019

எது மாதிரியும் இல்லாமல், புதுமாதிரியாய் இந்த ஆண்டு தீபாவளி...

முன்பெல்லாம் போனஸ்  வாங்கி தீபாவளி கொண்டாடினோம். கூடுதலாக விழாக்கால கடன் வேறு. கடந்த சில ஆண்டுகளாக போனஸ் இல்லை, இந்த ஆண்டு விழாக்கால கடனும் இல்லை.

முந்தைய காலங்களில் மாதக்கடைசியில் தீபாவளி வந்தால் அந்த மாதச் சம்பளத்தை முன்கூட்டியே வாங்கிய வரலாறும் உண்டு. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட போன மாதச் சம்பளத்தை தீபாவளிக்கு முன்னதாக வழங்குமாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கியதும் ஒரு வரலாறு ஆனது.

நிரந்தரத் தொழிலாளர்களின் நிலைமையே இதுவென்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமையோ அந்தோ பரிதாபம். விட்டேனா பார் என்று வீரவசனம் பேசியவர்கள் எல்லாம் இன்று கூனிக்குறுகி கூழைக்கும்பிடு போடும்  அவல நிலை.

BSNL-க்கு மூடுவிழா என்று தீயாய் பரவிய வதந்திகள், சம்பளம் போடக்கூட பணமில்லை என்ற ஒன்றை பத்தாக்கி  கடன் சுமையில் தத்தளிக்கும் BSNL என்று பீதியை கிளப்பிய ஊடகங்கள், அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என நினைத்து காசு கொடுத்து வதந்தி பரப்பிய சில தனியார் நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வந்தே விட்டது. இந்த ஆண்டு தீபாவளி உண்மையாகவே நமக்கு இனிய தீபாவளி என்றே சொல்ல வேண்டும்.

BSNL நிறுவனமானது இழந்த பொலிவை மீண்டும் பெற்று நீடித்து நிலைத்து நிற்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நமது சிந்தனையில்/பார்வையில் மாற்றம் தேவை, தடுமாற்றம் தேவையில்லை. வரவு குறையும் போது செலவும் குறைய வேண்டும் என்பது நியதி. 

BSNL நமது  நிறுவனம், அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் கசப்பு மருந்து சாப்பிட்டே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

அடுத்த தீபாவளி அனைவருக்கும் - வெளியேறுவோர் உள்ளேயிருப்போர் அனைவருக்கும் - நிச்சயம் இனிய தீபாவளியாக இருக்கும் என நம்புவோம். காலம் வெல்லும்.

Saturday, October 26, 2019

தீபாவளி நல்வாழ்த்துகள் - HAPPY DIWALI




















மையிருள் மறையட்டும்,
அறியாமையிருள் அகலட்டும்,
BSNL நிறுவனம் நிலைக்கட்டும்,
ஊழியர் வாழ்வு சிறக்கட்டும்.
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் !

Friday, October 18, 2019

18/10/2019 உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

செப்டம்பர் மாத ஊதியம் அக்டோபர் மாதம் 23-ம் தேதி வழங்கப்படுமென்று நிர்வாகம் உறுதிமொழி அளித்ததை ஏற்றுக்கொண்டு 18/10/2019 வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த  உண்ணாவிரதப் போராட்டம்  மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுகிறது.

Tuesday, October 15, 2019

18/10/2019 - AUAB உண்ணாவிரதப் போராட்டம் - FNTO பங்கேற்பு

ஊழியர்களின் ஊதியம் கூட உரிய தேதியில் வழங்கப் படாமல் இழுத்தடிக்கப்படும் இக்கட்டான சூழலில், ஒன்றுபட்ட போராட்டத்தின் அவசர - அவசியம் கருதி, செயல்பாட்டு ஒற்றுமையின் அடிப்படையில் - மத்தியச் சங்க அறைகூவலுக்கிணங்க -  18/10/2019 வெள்ளியன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் FNTO-வும் எழுச்சியோடு பங்கேற்கிறது.

Sunday, October 6, 2019

துணிந்து நில், தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தோழா !

16/09/2019 அன்று நடைபெற்ற 8-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் தொழிற்சங்கங்கள் பெற்ற வாக்குகள் 18/09/2019 அன்று எண்ணப்பட்டன.  அகில இந்திய அளவில் 48,127 வாக்குகளை (43.44%) பெற்று BSNLEU முதலிடத்தையும், 39,132 வாக்குகளை (35.32%) பெற்று NFTE இரண்டாமிடத்தையும், 4,829 வாக்குகளை (4.36%) பெற்று BTEU மூன்றாமிடத்தையும், 4,275 வாக்குகளை (3.86%) பெற்று FNTO நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.

தமிழகத்தில் 3,838 வாக்குகளை (50.33%) பெற்று NFTE முதலிடத்தையும் 2,831 வாக்குகளை (37.12%) பெற்று BSNLEU இரண்டாமிடத்தையும், 388 வாக்குகளை (5.09%) பெற்று FNTO மூன்றாமிடத்தையும், 111 வாக்குகளை (1.46%) பெற்று BTEU  நான்காமிடத்தையும் பெற்றுள்ளன.

காரைக்குடியில் 171 வாக்குகளை (61.96%) பெற்று NFTE முதலிடத்தையும் 68 வாக்குகளை (24.64%) பெற்று FNTO இரண்டாமிடத்தையும், 29 வாக்குகளை (10.51%) பெற்று BSNLEU மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

மதுரையில் 327 வாக்குகளை (39.25%) பெற்று NFTE முதலிடத்தையும் 325 வாக்குகளை (39.01%) பெற்று BSNLEU இரண்டாமிடத்தையும், 98 வாக்குகளை (11.76%) பெற்று FNTO மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

கேரளா, ஜார்கண்ட், கொல்கத்தா தொலைபேசி ஆகிய மூன்று மாநிலங்களில் FNTO இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அகில இந்திய அளவில் முதலிடமும், தமிழ் மாநிலத்தில் இரண்டாவது இடமும் பெற்றுள்ள BSNLEU சங்கம், ஜார்கண்ட் மற்றும் Northern Telecom. Region ஆகிய இரண்டு மாநிலங்களில் மூன்றாமிடத்தையும், BSNL தலைமையகமான கார்ப்பரேட் அலுவலகத்தில் (347-க்கு 19 வாக்குகளை மட்டுமே வாங்கி) நான்காமிடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல, தமிழ் மாநிலத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடமும் பெற்றுள்ள NFTE சங்கம்,  கொல்கத்தா தொலைபேசி மற்றும் வடகிழக்கு-I ஆகிய இரண்டு மாநிலங்களில் மூன்றாமிடத்தையும், கேரளா மாநிலத்தில் (6482-க்கு 373 வாக்குகளை மட்டுமே வாங்கி) நான்காமிடத்தையும் பெற்றுள்ளது.

கடந்த 2016-ல் நடைபெற்ற 7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் 2.96 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கி நான்காமிடத்தைப் பெற்றிருந்த BTEU சங்கம், இந்த தேர்தலில் 4.36 சதவீத வாக்குகளை வாங்கி, FNTO-வைப் பின்னுக்குத் தள்ளி, மூன்றாமிடத்துக்கு முன்னேறியிருப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகும். ஆந்திரா, குஜராத், இமாச்சல், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் BTEU சங்கத்தின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.

BSNLEU சங்கம் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில், எந்த சங்கமும் வேறெந்த சங்கத்துடனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடக் கூடாதென்று நிர்வாகம் உத்தரவிட்டிருந்த போதும், NFTE சங்கம் மறைமுகமாக TEPU, SEWA, SNATTA ஆகிய சங்கங்களுடன் மெகா கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலைச் சந்தித்தது ஊரறிந்த ரகசியம். எந்தக் கூட்டணியும் இல்லாமல் FNTO தனித்தே தேர்தலை எதிர்கொண்டது.  FNTO தனித்து நிற்பதைப் பலவீனமாகப் பிரச்சாரம் செய்த இரண்டு சங்கத்தினரும், FNTO உறுப்பினர்களைத் தங்களது இலக்காக்கிக் கொண்டு இல்லந்தோறும் சென்று பல்முனைத் தாக்குதல்களில் ஈடுபட்டு, ஜெயிக்கும் சங்கத்துக்கு வாக்களியுங்கள் என்று FNTO உறுப்பினர்களை வற்புறுத்தியும் மிரட்டியும் அவர்களது வாக்குகளைக் கவரக் கடும் பிரயத்தனம் செய்தனர். இவற்றையெல்லாம் புறந்தள்ளி, இந்தத் தேர்தலில் FNTO ஒன்றுமில்லாமல் போய்விடும், இரண்டு சதவீத வாக்குகளைக்கூட வாங்காது என்ற பலரது கனவுகளையும்/ஆரூடங்களையும் பொய்யாக்கி, 3.86 சதவீத வாக்குகளைப் பெற்று FNTO நான்காமிடத்தைப் பெற்றுள்ளதானது - தேசியச் சங்கத்தின் மீது நம் தோழர்களுக்கு இருக்கும் உறுதியான உணர்வின் வெளிப்பாடேயன்றி வேறில்லை.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும், போகும். ஆனால், ஐம்பதாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட, ஊழியர்களின் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு பல்வேறு சாதனைகள் புரிந்த தேசியச் சங்கம் - தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என்ற தோழர்களின் நம்பிக்கை வீண்போகாது.

தேசியச் சங்கத்தின் பிதாமகர் K.R. காட்டிய வழியில் நமது தொழிற்சங்கப் பயணம் தொய்வின்றித் தொடரும். காலம் வெல்லும்.

பீடு நடை போடுவோம் ! அனைவருக்கும் வீர வாழ்த்துக்கள் !